திவ்ய தேசம் 3 - திருவெள்ளறை (ஸ்வேதகிரி)
இந்த வைணவ திருத்தலம் திருச்சியிலிருந்து 20 கிமீ தொலைவில், துறையூருக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. இக்கோயில், வெண் பாறைகளான (வெள்ளறை = வெண்பாறை) குன்றின் மேல் அமைந்துள்ளதால், இத்தலத்திற்கு வேதகிரி என்ற பெயரும் உண்டு. ஸ்ரீரங்கம் கோயிலை விட பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவதால், ஆதி வெள்ளறை என்றும் அறியப்படுகிறது. புண்டரீகன் என்ற யோகி திருவெள்ளறையில் ஒரு நந்தவனம் அமைத்து அதில் வளர்ந்த துளசியால் பெருமாளையும் தாயாரையும் பூஜித்து வந்தார். இதில் மகிழ்ந்த பெருமாள் இவருக்கு தரிசனம் கொடுத்தார். இதனாலேயே இங்குள்ள பெருமாள் புண்டரீகாட்சப்பெருமாள் ஆனார் என்று நம்பப்படுகிறது.
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தந்து, மூலவர் புண்டரீகாக்ஷப் பெருமாள் (செந்தாமரைக் கண்ணன்) அருள் பாலிக்கிறார். தாயார் செண்பகவல்லி (செங்கமலவல்லி) என்கின்ற பங்கயச் செல்வி. தாயாருக்குத் தனிச் சன்னிதி உண்டு. தாயாரின் உத்சவமூர்த்திக்கு பங்கஜவல்லி என்ற திருநாமம். விமானம், விமலாக்ருதி விமானமாகவும், வில்வமரம் தல விருட்சமாகவும் அறியப்படுகின்றன.
திவ்ய கந்த, குச, சக்கர, புஷ்கல, பத்ம, வராக, மணிகர்ணிகா என்று மொத்தத்தில் ஏழு தீர்த்தங்கள் கோயில் வளாகத்துள்ளேயே அமைந்துள்ளன. இவ்வைணவ திருப்பதியை, பெரியாழ்வார் (பெரியாழ்வார் திருமொழியில் 11 பாசுரங்கள்) மற்றும் திருமங்கையாழ்வார் (பெரிய திருமொழியில், சிறிய திருமடலில் மற்றும் பெரிய திருமடலில் சேர்த்து 13 பாசுரங்கள்) மங்களாசாசனம் செய்துள்ளனர்.
அவற்றில் சில, உங்கள் பார்வைக்கு:
பெரியாழ்வார் அருளியவை:
**********************
ஆறாம் திருமொழி - உய்யவுலகு
(தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்)
71@..
உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில்மருவி*
உன்னொடு தங்கள் கருத்தாயின செய்துவரும்*
கன்னியரும் மகிழக் கண்டவர் கண்குளிரக்*
கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்குஅருளி*
மன்னுகுறுங்குடியாய். வெள்ளறையாய்.* மதிள்சூழ்-
சோலைமலைக்கரசே. கண்ணபுரத்தமுதே.*
என்னவலம்களைவாய். ஆடுகசெங்கீரை*
ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே.
எட்டாம் திருமொழி - இந்திரனோடு
(கண்ணனை த்ருஷ்டிதோஷம் வாராதபடி திருவந்திக்காப்பிட அழைத்தல்)
192@..
இந்திரனோடு பிரமன்* ஈசன் இமையவர் எல்லாம்*
மந்திர மாமலர் கொண்டு* மறைந்துஉவராய் வந்து நின்றார்*
சந்திரன் மாளிகை சேரும்* சதிரர்கள் வெள்ளறை நின்றாய்*
அந்தியம் போது இதுவாகும்* அழகனே. காப்பிடவாராய். (2) 1.
197@
கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல்* கருநிறச் செம்மயிர்ப் பேயை*
வஞ்சிப்பதற்கு விடுத்தான்* என்பது ஓர் வார்த்தையும் உண்டு*
மஞ்சு தவழ் மணிமாட* மதிள்திரு வெள்ளறை நின்றாய்.
அஞ்சுவன் நீ அங்கு நிற்க* அழகனே. காப்பிடவாராய். 6.
198@
கள்ளச் சகடும் மருதும்* கலக்கழிய உதை செய்த*
பிள்ளையரசே.* நீ பேயைப் பிடித்து முலை உண்ட பின்னை*
உள்ளவாறு ஒன்றும் அறியேன்* ஒளிஉடை வெள்ளறை நின்றாய்.*
பள்ளி கொள் போது இதுவாகும்* பரமனே. காப்பிடவாராய். 7.
*********************************************
திருமங்கையாழ்வார் 'பெரிய திருமொழி'யில் அருளியவை:
************************
ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி - வென்றி
இந்த பத்து பாசுரங்களில், தன்னை அடிமையாக ஏற்று, பெருமானின் திருவடியில் தொண்டு செய்ய, தடங்கல்களை நீக்கி அருளுமாறு திருவெள்ளறை புண்டரிகாஷனை வேண்டுகிறார் !
1368@..
வென்றிமாமழுவேந்தி முன்மண்மிசைமன்னரை* மூவெழுகால்கொன்றதேவ*
நின்குரைகழல் தொழுவதோர்வகை* எனக்கருள்புரியே*
மன்றில்மாம்பொழில் நுழைதந்து* மல்லிகைமௌவலின் போதலர்த்தி*
தென்றல்மாமணம் கமழ்தரவரு* திருவெள்ளறை நின்றானே (5.3.1)
பரசுராமனாக, கையில் மழு ஏந்தி, பூவுகில் இருபத்தோரு தலைமுறை அரசர்களை அழித்தவனே ! மல்லிகைப் பந்தல் வழி வரும் தென்றலானது, வானுயர்ந்த சோலைகளில் நுழைந்து, தான் ஏந்தி வந்த நறுமணத்தை எங்கும் கமழச்செய்யும் திருவெள்ளறையில் கோயில் கொண்டவனே ! ஒளி மிக்க தாமரையத்த உன் திருவடிகளை என்றும் பற்றிட வழிமுறை ஒன்று எனக்கருள்வாயாக !
********************************
1371@
வாம்பரியுக மன்னர்தம் உயிர்செக* ஐவர்க்கட்கு அரசளித்த*
காம்பினார் திருவேங்கடப் பொருப்ப.* நின் காதலை அருள் எனக்கு*
மாம்பொழில் தளிர்கோதிய மடக்குயில்* வாயது துவர்ப்பெய்த*
தீம்பலங்கனித் தேனது நுகர்* திருவெள்ளறை நின்றானே (5.3.4)
யுத்த பூமியில் எதிர்த்து நின்ற அரசர்களை அழித்து, பஞ்ச பாண்டவர்க்கு அவர்க்குரிமையான அரசை மீட்டுத் தந்த கண்ணபிரானே ! திருவேங்கடம் வாழ்பவனே ! மாவிலைகளை உண்டதால் நாவில் ஏற்பட்ட கசப்பை, பக்கமிருக்கும் பலாவின் தேனைக் குடித்து போக்கிக் கொள்ளும் குயில்கள் பாடும் திருவெள்ளறை நின்ற பெருமாளே, உன் மேல் எனக்கிருக்கும் பேரன்பு எப்போது நீங்கா வண்ணம் எனக்கருள்வாயே !
*****************************************
1372@
மானவேல் ஒண்கண்மடவரல்* மண்மகள்அழுங்க முந்நீர்ப்பரப்பில்*
ஏனமாகி அன்றுஇருநிலம் இடந்தவனே.* எனக்கருள் புரியே*
கானமாமுல்லை கழைக் கரும்பேறி* வெண்முறுவல் செய்துஅலர்கின்ற*
தேனின் வாய்மலர் முருகுகுக்கும்* திருவெள்ளறை நின்றானே (5.3.5)
முன்பொரு முறை, அலை பாயும் பெரிய அழகிய கண்களை உடைய பூதேவி, கடலடியில் பெருந்துயரில் உழன்றபோது, நீ வராக அவதாரமெடுத்து, கொம்பின் மேல் ஏற்றி, அவளை மீட்டெடுத்தாய். கரும்பின் மேல் படர்ந்து, வெண் சிரிப்பை உதிர்ப்பது போல் தோற்றமளிக்கும் பெரிய முல்லைக் கொடியில் தேனுண்ணும் வண்டுகள் நிறைந்த திருவெள்ளறை நகர் வாழ் பெருமாளே ! எனக்கு அருள் புரிவாய் !
*********************************
1376@
ஆங்குமாவலிவேள்வியில் இரந்துசென்று* அகலிடம் முழுதினையும்*
பாங்கினால்கொண்டபரம. நின்பணிந்தெழுவேன்* எனக்கு அருள்புரியே,*
ஓங்குபிண்டியின் செம்மலரேறி* வண்டுஉழிதர*
மாவேறித்தீங்குயில் மிழற்றும்படப்பைத்* திருவெள்ளறை நின்றானே (5.3.9)
முன்பொரு முறை, வாமன அவதாரமெடுத்து, மாபலிச் சக்ரவர்த்தி நடத்திய யாகத்தின் போது, அண்டம் முழுவதையும் அவனிடம் பாங்காக இரந்து பெற்ற பரமனே ! அசோக மரங்களின் சிவந்த மலர்களில் மகிழ்ச்சியாக விளையாடும் வண்டுகளைப் பார்த்து இனிமையாகப் பாடும் குயில்கள் நிறைந்த திருவெள்ளறை நகரில் கோயில் கொண்ட பெருமானே ! உன்னை என்றும் தொழுது உனக்கு தொண்டு செய்ய எனக்கு அருள் புரிவாயாக !
***********************************
1377@..
மஞ்சுலா மணிமாடங்கள்சூழ்* திருவெள்ளறை அதன்மேய*
அஞ்சனம்புரையும் திருவுருவனை* ஆதியை அமுதத்தை*
நஞ்சுலாவிய வேல்வலவன்* கலிகன்றிசொல் ஐயிரண்டும்*
எஞ்சலின்றிநின்று ஏத்தவல்லார்* இமையோர்க்கு அரசு ஆவர்களே (5.3.10)
அழகிய மாடங்கள் சூழ்ந்த திருவெள்ளறையில் என்றும் ஆட்சி புரியும் அழகிய திருமேனி கொண்டானை (அஞ்சன வண்ணன்), ஆதி நாயகனை (ஜகத் காரணன்), அமுதை ஒத்தவனைப் பற்றி, விடம் தோய்த்த வேல் கொண்டு பகைவர்களை விரட்டும் கலியனாகிய நான் இயற்றிய இப்பத்து பாடல்களையும் தவறாமல் படிக்கும் அடியார், தேவர்களுக்கு அரசன் ஆவர்!
****************************************************
பத்தாம் பத்து - முதல் திருமொழி
1851@
துளக்கமில் சுடரை,* அவுணனுடல்-
பிளக்கும் மைந்தனைப்* பேரில் வணங்கிப்போய்*
அளப்பில் ஆரமுதை* அமரர்க்கு அருள்-
விளக்கினை* சென்று வெள்ளறைக் காண்டுமே 10.1.4
என்றும் ஒளி குறையா பெருஞ்சுடர் போன்றவனை, ஹிரண்யனின் உடல் பிளந்த வலிமை மிக்கவனை, நாம் திருப்பேர் நகர் சென்று அடி பணிவோம். உண்ண உண்ண தெவிட்டாத அமுதம் போன்றவனை, நித்யசூரிகளுக்கு அருள் விளக்காய் இருப்பவனை, இன்றே திருவெள்ளறை நகர் சென்று, அவன் மலரடி பற்றி நாம் வணங்குவோமாக !
**************************
விசாலமான வளாகமும், பிரும்மாண்டமான மதில் சுவர்களும் இக்கோயிலின் சிறப்பு அம்சங்கள். முன் கோபுரம் பூர்த்தியாகாத நிலையில் உள்ளது. கோயில் கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய பிரகாரத்தில் தென்பகுதியில் கல் அறைகள் உள்ளன. இங்கிருந்து ஒலி எழுப்பினால் எதிரொலி தெளிவாக கேட்கும்.
ஸ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன் மற்றும் ஆதிசேஷன் ஆகியோர் மனித உருவில் பெருமாள் பக்கத்தில் நின்று கைங்கர்யம் செய்து இங்கு காட்சியளிப்பது விசேஷமாகக் கருதப்படுகிறது. சக்கரத்தாழ்வார், ஆண்டாள், உடையவர் (ராமானுஜர்) இவர்களுக்குத் தனிச்சன்னிதிகள் உள்ளன. நாதமுனிகளின் பிரதம சீடரான உய்யக்கொண்டான் மற்றும் எங்களாழ்வான் ஆகியோரின் அவதாரத்தலம் இது. உடையவர் ஸ்ரீராமானுஜர் இங்கு சிறிது காலம் வாழ்ந்து வைணவத்தை வளர்த்திருக்கிறார். மணவாளமாமுனிகளும், வேதாந்த தேசிகரும் (தனது ஹம்ச சந்தேஸத்தில்) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இத்தலத்தைப் பற்றி பாடியிருக்கின்றனர்.
கருடாழ்வாரும், மார்க்கேண்டயரும், சிபிச் சக்ரவர்த்தியும் வழிபட்ட புண்ணியத் தலமிது. சிபிச்சக்கரவர்த்திக்கு ஸ்வேத வராஹனாக (வெள்ளைப் பன்றி) தலப்பெருமாள் காட்சி தந்து அருள் பாலித்ததால், மூலவருக்கு ஸ்வேதபுரிநாதன் என்று பெயர் ஏற்பட்டதாக தலபுராணம் கூறுகிறது. இதன் காரணமாகவே இத்தலத்திற்கும் ஸ்வேதபுரி ஷேத்திரம் என்றும் பெயர் வந்தது. வடக்கு வாயிலில் உள்ள ராஜகோபுரத்தில், ஹொய்ஸாலா மன்னர்கள் இக்கோயிலுக்கு செய்த திருப்பணிகள் குறித்த வரலாற்று ஆதாரங்கள் காணப்படுகின்றன.
இங்குள்ள பெருமாளை தரிசிக்க 18 படிகளை கடக்க வேண்டும். இவை கீதையின் 18 அத்தியாயங்களை குறிக்கிறது. அடுத்த கோபுர வாயிலில் 4 படிகள் உள்ளன. இவை நான்கு வேதங்களை குறிக்கிறது. அதன் பின் பலிபீடத்தை வணங்கி ஐந்து படிகளை கடக்க வேண்டும். இவை பஞ்சபூதங்களை குறிக்கிறது. கோயிலுக்கு, உத்தராயண வாயில் என்றும் தக்ஷ¢ணாயன வாயில் என்றும் (கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோயிலில் உள்ளது போலவே) இரண்டு வாயில்கள் உள்ளன. தை முதல் ஆணி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி வரை தக்ஷ¢ணாயன வாசல்வழியாகவும், பெருமானைத் தரிசிக்கச் செல்ல வேண்டும் என்பது மரபு.
இவ்வாசல்களை குறித்து ஒரு சிறு விளக்கம்: மனித வாழ்க்கையில் ஜனனம், மரணம் என்று இரு தனி வாசல்கள் உள்ளதாகக் கருதலாம். அவற்றில் நுழையும்போது, பரமாத்மாவை உணரும் பாக்கியம் ஆன்மாவுக்குக் கிடைக்கிறது. அதனாலேயே, பரந்தாமன், உத்தராயணத்தின் தொடக்கத்தில் சூரிய நாராயணனாகவும், தட்சிணாயனத்தின் முடிவில் கோவிந்தனாகவும் அருள் பாலிப்பதாக ஓர் ஐதீகம் உண்டு. உத்தராயண வாசலை, ஜீவாத்மாக்கள் இப்பூவுலகிற்குள் (குபேரனின் இடம்) நுழையும் வாசலாகவும், தட்சிணாயன வாசலை, மரண லோகத்தின் (யமனின் இடம்) நுழைவாயிலாகவும் எண்ணிக் கொள்ளலாம்.
இக்கோயிலுக்கு 'நாழி கேட்டான்' வாயில் என்று இன்னொரு வாசலும் உண்டு ! ஒரு முறை, தனது தற்காலிக உறைவிடமொன்றுக்குச் சென்று திரும்பிய பெருமாளை மகாலஷ்மி இவ்வாசலில் வழி மறித்து, அவர் தாமதம் குறித்து கேள்வி கேட்டதாக ஓர் ஐதீகம் நிலவுகிறது. சித்திரை கோடை திருநாள் சித்ராபவுர்ணமியில் கஜேந்திர மோட்சமும், ஆவணி ஸ்ரீஜெயந்தி வீதியடி புறப்பாடும் நடைபெறுகின்றன. பங்குனி திருவோணம் நிட்சத்திரத்தில் பிரமோத்சவம் கொண்டாடப்படுகிறது.
என்றென்றும் அன்புடன்
பாலா
14 மறுமொழிகள்:
பாலா,
நன்றாக எழுதியுள்ளீர்கள். சிற்பங்கள் ( கடைசிக்கு முன்பு உள்ள படம் ) தற்கால சிற்பங்கள். கோயிலுக்கு முன்பு உள்ள கோபுரம் சிதைந்து போய் மரங்கள் வளர்ந்திருக்கிறது, சென்ற முறை சென்ற போது பார்த்தேன்.
போன முறை கோயிலுக்கு என் மகள் ஆண்டாளை அழைத்து கொண்டு சென்றிருந்தேன். பெருமாள் தீர்த்தம் வாங்கிய பின் இன்னும் கொஞ்சம் வேண்டும் என்றாள். அர்ச்சகர், அந்த பாத்திரத்தை அவள் கையில் கொடுத்து எவ்வளவு வேண்டுமானாலும் குடித்துவிட்டு தா என்றார்!.
இங்கு உள்ள ஸ்வஸ்திக் குளம் பிரசித்தம். அதேபோல் இங்கு உள்ள சக்கிரத்தாழ்வார் ஃபோமஸ்.
இங்கு உள்ள மூலவர் சுனாம்பினால் ஆனது. அதனால் ஒன்லி தையில காப்பு
கோயிலுக்கு முன் கடையில் விற்கும் பண்ணீர் சோடா நல்ல டேஸ்ட்.
தேசிகன்,
தன்யனானேன் :) மிக்க நன்றி, சில விஷயங்கள் அறியத் தந்தமைக்கு.
பாலா
இந்த கோவிலில் அர்விந்திற்கு உரிமை உண்டு என்பதால் இந்தியா செல்கிற போதெல்லாம் இங்கே செல்வோம்.சுத்திகரிப்பு, ஆலயங்களுக்கு தேவையான நிர்வாக பொறுப்பில் பங்கு கொள்வதும் உண்டு.
//பத்மா அர்விந்த் said...
பாலா
இந்த கோவிலில் அர்விந்திற்கு உரிமை உண்டு என்பதால் இந்தியா செல்கிற போதெல்லாம் இங்கே செல்வோம்.சுத்திகரிப்பு, ஆலயங்களுக்கு தேவையான நிர்வாக பொறுப்பில் பங்கு கொள்வதும் உண்டு.
//
padma, nanRi !
நல்ல விரிவான பதிவு பாலா! இரண்டு வாயில்கள் பற்றிய தகவல்கள் நன்றாக இருந்தன.
//வில்வமரம் தல விருட்சமாகவும் அறியப்படுகின்றன//
வைணவக் கோயில்களில், வில்வமா?
இது எனக்குப் புதிய செய்தி பாலா.
ஆனால் வில்வ பத்ரம் (வில்வ இலை) மகாலட்சுமிக்குப் பிரியமான ஒன்று என்று பெரியோர் சொல்லக் கேட்டு இருக்கிறேன்.
சைவ-வைணவ நல்லுறவைப் பார்த்தீர்களா? மாயனின் தங்கை பார்வதி. சிவனாருக்கு பிடித்த வில்வம், மகாலட்சுமிக்கும் பிடித்த ஒன்று!
ஆழ்வார் பாடல்களை இன்னொரு முறை படிக்க வேண்டும். படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!
பாலா....
வாழ்துக்கள் & தொடரவும் என்று சொல்வது தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை.
பதிவுக்கு சம்பந்தம் உள்ளதாய் சம்பந்தம் இல்லாதது.
உலகத்தில் அழகானது என்று தோன்றும் எல்லாம் ஒரு காலகட்டத்தில்...சமய சந்தர்ப்பத்தில் அழகில்லாததாய் தோன்றிவிடும்
"Beauty is not only in the object but also in the eye of beholder " என்பார்கள்.
ஆனால் உலகத்தில் எந்த நிலையிலும் எல்லோருக்கும் அழகாய் தெரிவது குழந்தையின் செய்கைகள்தான்... குழந்தை எது செய்தாலும் அழகு ...எப்படி செய்தாலும் அழகு....இதை பக்தியுடன் இணைத்து உணர்வு பூர்வமாக பெரியாழ்வார் திருமொழியில் கொட்டியிருப்பார். கண்ணனின் தொட்டில் பருவம் முதல் படிப்படியாக வளர்ச்சிக் கிரமமாக குழந்தையின் செய்கைகளை சிலாகித்திருப்பார்...அதை கண்ணன் செய்வது போல் யசோதையின் கண் வழியே அதை அனுபவித்திருப்பார்... குழந்தைப்பருவத்தில் இந்த "செங்கீரைப் பருவம்" ஒரு முக்கியமான கட்டம்...குழந்தை தவழ ஆரம்பித்து கொஞ்ச நாட்களில் முழந்தாள்களையும், இரண்டு கைளையும் தரையில் ஊன்றிக்கொண்டு தலையை தூக்கி அப்படியும் இப்படியும் ஆடுமே ... இடுப்பில்,காலில்,கையில் ,கழுத்தில் இட்ட ஆபரணங்கள் ஆட ஒரு குட்டி யானை போல் அப்படியும் இப்படியும் ஆடுமே அதைத்தான் செங்கீரை ஆடுதல் அல்லது செங்கீரைப் பருவம் என்பது..அதை கண்னன் செய்வதை யசோதை கண்டு களிப்பது போல் அழகாக பத்து பாட்டுகளில் அனுபத்திருப்பார் பெரியாழ்வார்...Great..
""உன்னையும் ஒக்கலையில் கொண்டு தம் இல் மருவி*
உன்னொடு தங்கள் கருத்தாயின செய்துவரும்*
கன்னியரும் மகிழக் கண்டவர் கண்குளிரக்*
கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்குஅருளி*
மன்னுகுறுங்குடியாய். வெள்ளறையாய்.* மதிள்சூழ்-
சோலைமலைக்கரசே. கண்ணபுரத்தமுதே.*
என் அவலம்களைவாய். ஆடுகசெங்கீரை*
ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே."""
திருக்குறுங்குடியில் கோயில் கொண்டிருப்பவனே...திருவெள்ளரையில் வசிப்பவனே..சோலை மலை அரசனே..கண்ணபுரத்து அமுதமே...என் துன்பங்களை போக்குபவனே ... உன்னை இடுப்பிலே தூக்கிக்கொண்டு தங்கள் வீடுகளுக்கு சென்று தம் விருப்பப்படி உன்னை கொஞ்சி மகிழும் இளம் பெண்கள் மனம் மகிழும் படியாகவும்,கண்டவர் கண் குளிரும் படியும், கவி எழுதக் கற்றவர் பல பிள்லைக் கவிகள் கொண்டு வரும்படி செங்கீரை ஆட வேண்டும்...ஏழுலத்தின் தலைவனே..நீ இப்படியாக ஆடுக...
நல்லுணர்வைத் தூண்டும் கட்டுரைகள்
வாழ்துக்கள் & தொடரவும் என்று சொல்வது தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை.
அன்புடன்...ச.சங்கர்
""""இக்கோயிலுக்கு 'நாழி கேட்டான்' வாயில் என்று இன்னொரு வாசலும் உண்டு ! ஒரு முறை, தனது தற்காலிக உறைவிடமொன்றுக்குச் சென்று திரும்பிய பெருமாளை மகாலஷ்மி இவ்வாசலில் வழி மறித்து, அவர் தாமதம் குறித்து கேள்வி கேட்டதாக '''''''
ஆஹா..பெருமாள் வீட்டுலையும் இதுதான் கதையா ??
In a lighter vain :)))
அன்பு பாலா,
கட்டுரையும், விளக்கங்களும் அருமை.
இத்துடன் திருவெள்ளறை புகைப்படங்கள் அனுப்பியுள்ளேன். அதையும் சேர்த்துத் தங்களின் கட்டுரையை மிளிரச் செய்யுங்கள்.
கண்ணபிரான்,
கருத்துக்களுக்கு நன்றி.
சங்கர்,
பெரியாழ்வாரின் பாசுரத்திற்கு அருமையான விளக்கம் அளித்ததற்கு நன்றி. பாராட்டுக்கும் நன்றி.
CT,
நன்றி.
//I didn't understand the whole meaning of the .... //
சீக்கிரம் விளக்கம் தருகிறேன்.
ஞானவெட்டியான்,
புகைப்படங்களுக்கு நன்றிகள் பல. அவற்றையும் பதிவில் இடுகிறேன்.
எ.அ.பாலா
திருவரங்கத்திற்குப் பலமுறை சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் தாயார் திருச்சுற்றில் இருக்கும் சிறிய கோட்டத்தில் இருக்கும் திருவெள்ளறைப் பெருமாளை மட்டும் வணங்கியிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் திருவெள்ளறையும் செல்லவேண்டும் என்ற ஆவல் மிகும்; அடுத்த முறை சென்று கொள்ளலாம் என்று விட்டுவிடுவேன். இதுவரை செல்லாத குறையை உங்கள் பதிவு தீர்த்துவைத்துவிட்டது. :-)
சங்கர் ஒரு பாடலுக்குப் பொருளுரை சொல்லிவிட்டார். மற்றவற்றிற்கு அடியேன் சொல்ல முயல்கிறேன். :-)
இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவர் எல்லாம்
மந்திர மாமலர் கொண்டு மறைந்து உவராய் வந்து நின்றார்
சந்திரன் மாளிகை சேரும் சதிரர்கள் வெள்ளறை நின்றாய்
அந்தி அம்போது இதுவாகும் அழகனே காப்பிடவாராய்
இந்திரன், பிரமன், ஈசன், தேவர்கள் எல்லாரும் மந்திரங்களுடன் கூடிய மலர்களைக் (உன் திருவடிகளுக்காக) எடுத்துக் கொண்டு நீ விளையாடி முடியட்டும்; பின்னர் திருவடி தொழுவோம் என்று மறைந்து நின்று உன் திருவிளையாடல்களைக் கண்டு உவந்து நிற்கின்றனர். அவர்களுக்கு அருள இங்கே வாராய்.வான் நிலவு மாளிகையின் மேல்மாடியில் வந்துவிட்டதாகத் தோன்றும் அளவுக்கு உயர்ந்த மாளிகைகளைக் கொண்டுள்ள ஆடலரசர்கள் (ஆடலரசிகள்) இருக்கும் திருவெள்ளறையில் நின்றவனே! அழகிய அந்திப் பொழுது ஆகிவிட்டது; அழகனே உனக்கு திருக்காப்பு இடவேண்டும். வாராய்.
கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல் கருநிறச் செம்மயிர்ப் பேயை
வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பது ஓர் வார்த்தையும் உண்டு
மஞ்சு தவழ் மணிமாட மதிள்திரு வெள்ளறை நின்றாய்
அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே காப்பிட வாராய்.
மேகங்கள் தவழ்கின்ற மணிமாடங்களும் மதிள்களும் உடைய திருவெள்ளறை நின்றவனே! கம்சன் உன் மேல் பொறாமையும் சினமும் கொண்டு கருநிறமும் செம்முடியும் உடைய ஒரு பேய்ப்பெண்ணை உன்னைக் கொல்வதற்கு அனுப்பியுள்ளான் என்று ஒரு வதந்தியும் உண்டு. நீ வெளியே நின்றால் உனக்கு என்ன ஆகுமோ என்று அஞ்சுகிறேன். அழகனே திருக்காப்பு இட்டுக்கொள்ள வாராய்.
கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய உதை செய்த
பிள்ளையரசே நீ பேயை பிடித்து முலை உண்ட பின்னை
உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளியுடை வெள்ளறை நின்றாய்
பள்ளி கொள் போதிதுவாகும் பரமனே காப்பிட வாராய்
கள்ளத்தனமாக சக்கரவடிவில் வந்த சகடாசுரனும் மருதமர உருவில் இருந்த அசுரனும் கலங்கி அழியும் படி உதைத்த பிள்ளையரசே; நீ பேயைப் பிடித்து அவள் முலையுண்டு அதனுடன் அவள் உயிரையும் சேர்த்து உண்டதைக் கண்ட பின்னால் நீ பிள்ளையரசா பரமனா என்று உள்ளதை உள்ளவாறு அறியாமல் திகைக்கிறேன். ஒளியுடைய திருவெள்ளறை நின்றாய். உறங்கும் நேரம் ஆகிவிட்டது. பரமனே (குழப்பம் தீர்ந்துவிட்டது; நீ பரமனே என்று உணர்ந்தேன்) காப்பிட்டுக் கொள்ள வாராய்.
பரகால நாயகியின் பாசுரங்களை இதுவரைப் படித்ததில்லை. அவற்றைப் பொருளுடன் தந்ததற்கு நன்றி. தித்திக்கும் தேன் சுவை.
நாழி கேட்டான் வாயில் என்று திருமாலிருஞ்சோலை அழகர் கோவிலிலும் உண்டு. அங்கும் சித்திரைத் திருவிழாவில் வைகை ஆற்றில் இறங்கி திருவிழா கண்டு பின்னர் அழகர் கோவில் திரும்பும் போது தாயார் வழிமறித்து சென்ற இடம் குறித்தும் தாமதம் குறித்தும் கேட்கும் வைபவம் நடைபெறும்; அதற்கு 'மட்டையடி உற்சவம்' என்றும் பெயர். தாயாரும் பெருமாளும் எதிர் எதிரே நின்று திருவாராதனம் நடந்து கொண்டிருக்கும் போது ஏதோ காரணத்திற்காக அங்குள்ளவர்கள் வாழைமட்டையால் தரையில் அடித்துக் கொண்டே இருப்பார்கள்.
குமரன்,
மிக அழகான பாசுர விளக்கங்களுக்கு நன்றிகள் பல ! உங்களை மிஞ்ச முடியுமா என்ன ? சில தகவல்களுக்கும் நன்றி.
எ.அ.பாலா
குமரன்...
உங்களுக்கு நன்றி சொல்லமாட்டேன் :)
மற்ற பாடல்களுக்கு உங்களை விளக்கம் எழுதத் தூண்டிய எனக்கு நானே ஒரு சபாஷ் போட்டுக் கொள்கிறேன் :)
அன்புடன்...ச.சங்கர்
சங்கர், குமரன்,
பலே, சரியான போட்டி !
என் பணியை குறைத்ததற்கு நன்றி :)
சங்கர், குமரன்,
பலே, சரியான போட்டி !
என் பணியை குறைத்ததற்கு நன்றி :)
Post a Comment